● து. செல்வராஜு, விழுப்புரம்.
தங்களது ஆன்மிகம், ஜோதிடத்தொண்டு வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது. வாழ்த்துகள்! பாராட்டுகள்! ஒருசில பஞ்சாங்கத்தில் யோகங் களில் "பிரபலாரிஷ்ட யோகம்' என்று குறிப்பிடப் பட்டுள்ளது. உதாரணமாக ஞாயிறு- பரணி, திங்கள்- சித்திரை, செவ்வாய்- உத்திராடம், புதன்- அவிட்டம், வியாழன்- கேட்டை, வெள்ளி- பூராடம், சனி- ரேவதி. மேற்கண்ட கிழமை, நட்சத் திரத்தில் பிறந்தால் தோஷமா? திதிகளின் விஷ சூன்ய ராசிகள் என்பதற்கும் விளக்கம் தேவை!
அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், வர்ஜயோகம், நாச யோகம், தக்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்று எட்டு யோகம் உண்டு. இதில் அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம் என்ற மூன்றுமே நல்ல யோகம். மற்றவை கெடுதல். நீங்கள் குறிப்பிட்டபடி சில கிழமைகளில், சில நட்சத்திரம் வந்தால் பிரபலாரிஷ்ட யோகம். இம்மாதிரி காலங்களில் திருமணம், கிரகப்பிரவேசம், தொழில் துவங்கு தல் போன்ற நல்ல காரியங்களைத் தவிர்க்கவேண்டும். இதையெல்லாம் யார் கடைப்பிடிக்கிறார்கள்? கிழமைகளில் 27 நட்சத்திரம் சேரும் காலம் மேற்கண்ட யோகங்கள் உண்டாகும். இதேபோல ஏழு கிழமைகளிலும் குறிப்பிட்ட திதி சேர்வதும் அசுபயோகம். இவற்றையும் யாரும் அனுஷ்டிப்பதில்லை. காலண்டரில் சுபமுகூர்த்தம் என்று போட்டிருந்தாலும், மண்டபம் காலியாக இருந்தாலும், செவ்வாய்- சனிக்கிழமை தவிர எல்லா நாட் களிலும் விசேஷம் வைத்துவிடு கிறார்கள். இவற்றைக் காட்டிலும் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. ஆங்கிலத் தேதிப்படி 8 அறவே கூடாது. அடுத்து 4-ம், 7-ம் தவிர்க்கப்பட வேண்டும். எல்லா சுபயோகம் இருந்தாலும், தேதி எண் அல்லது கூட்டு எண் 8 வரும் நாளில் திருமணம் வைத்தால், கண்டிப்பாக வாரிசு இருக்காது அல்லது தம்பதிகள் பிரிந்துவிடுவார்கள். கிரகப் பிரவேசமும் கூடாது.
● கே. மணி, எடப்பாடி.
என் மகன் கௌரிசங்கருக்கு திருமணம் எப்போது நடைபெறும்?
ஆவணி மாதம் 27 வயது முடியும். மகர ராசியில் சனி இருப்பதும், அவரை மிதுனச் செவ்வாய் பார்ப்பதும் களஸ்திர தோஷம்! ரிஷப லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. நாக தோஷம். 30 வயதுக்குமேல் 35 வயதுவரை திருமணம் தாமதமாகலாம். காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் 2019 அக்டோபருக்குமேல் புதன் புக்தியில் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும். காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொள்ளவும். செல்: 99942 74067.
● ப்ரவீன், கோவை-38.
நான் இஞ்சினீயரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஏழரைச்சனியும், சனி தசையும் நடப்பதால் வாழ்வில் பல தடைகள், சோதனைகள். மேற்படிப்பு படிக்க விரும்பு கிறேன். சாத்தியமா? உணவு சம்பந்தமான தொழிலை சிறு அளவில் தொடங்க விரும்பு கிறேன். அரசு உத்தியோகம் அமையுமா?
விருச்சிக ராசிக்கு 2020 வரை ஏழரைச்சனி நடக்கிறது. இது துடுப்பு இல்லாத படகு காற்றடித்த பக்கம் போவது போலத்தான் வாழ்க்கை ஓடும். எந்த திட்டமும் செயலும் நடக்காது. சனிப்பெயர்ச்சிவரை நாளைக் கடத்தவும். சொந்தத்தொழில் செய்தாலும் கடனாளியாகத்தான் இருப்பீர்கள். வேலைக்குப் போவது நல்லது.
● என். ஜெகதீசன், பொள்ளாச்சி.
என் தங்கை மகள் சுபாஷினிக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்போது வேலை கிடைக்கும்? அரசு வேலை அமையுமா?
சுபாஷினி உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி. ஜென்மச்சனி, ராகு தசை நடப்பு. சிம்ம லக்னம். 7-ல் சனி. 27 வயது முடிந்தால்தான் திருமணம். சூரியன் நீசம். அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் பணி அமையலாம். அதுவும் தாமதமாகக் கிடைக்கும்.
● வி. கல்யாண சுந்தரம், சென்னை-110.
என் மகள்- மகன் இருவரின் எதிர்காலம், வேலை, திருமணம் பற்றி விளக்கவும்.
மகள் காயத்திரி மகர ராசி, மிதுன லக்னம். நாகதோஷம். ஏழரைச்சனி, ராகு தசை நடப்பு. 30 வயது பிறக்க வேண்டும். (திருமணத்துக்கு). மகன்- யுவராஜ் விருச்சிக ராசி, கும்ப லக்னம். 2020 வரை அவருக்கும் ஏழரைச்சனி. குட்டிச்சுக்கிர தசை. தங்கையின் திருமணத்துக்குப் பிறகு இவர் திருமணம் நடக்கும். பிள்ளைகளின் இரு ஏழரைச்சனியும் உங்களை பாதிக்கும். ஆயுள் குற்றமில்லை. ஆரோக்கியக் குறைவு, பொருளாதார நெருக்கடி, வைத்திய செலவு, தொழில் மந்தம் ஏற்படலாம். சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் மிளகு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். (சனிப்பெயர்ச்சிவரை- 2020).
● வி.எம். சுந்தரம், வேளச்சேரி.
ஜோதிடப்பணி- மருத்துவப்பணி இரண்டுமே மகத்தான பணி. இப்படிப்பட்ட ஜோதிடக் கலைஞரை (தங்களை) பெற்றெடுத்த தாய்- தந்தையாரை வணங்கி, என் கேள்வியை சமர்ப்பிக்கிறேன். 14-8-2017-ல் மகள் மாதவி இந்துவுக்கு மறுமணத்துக்காக புனர்விவாக ஹோமம் சிறப்பாக செய்து கொடுத்தமைக்கு நன்றி! மகள் இந்தோனேசியாவுக்கு வேலைக்குப் போய்விட்டாள். வேலையில் திருப்தி- முன்னேற்றம். அடுத்து மறுமணம் எப்போது நடைபெறும்? எப்படி இருக்கும்? மகள் ஜாதகத்தைப் பார்த்த ஈரோடு ஜோதிடர் "சூரிய தசை அட்ட மாதிபதி தசை. அடுத்து சந்திர தசையில் பாதகாதிபதி புக்தி நடக்கும்போது ஆயுள் பங்கம் உண்டாகும்' என்றார். உண்மையா?
மகர லக்னம். அதில் ஆயுள்காரகன் சனி ஆட்சி. சிம்ம ராசி. சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் குரு வீட்டில். குரு 7-ல் கடகத்தில் உச்சம். லக்னத்துக்குப் பார்வை! எனவே தீர்க்காயுள் ஜாதகம். 70 வயது தீர்க்கம். 2020-ல் சனி மகரத்துக்கு வரும்போது மறுமணம் சிறப்பாக நடக்கும். ஹோமம் செய்த பலனாக நல்ல மணவாழ்க்கை உண்டாகும். கவலை வேண்டாம்.
● ரவிகுமார், சத்தியமங்கலம்.
எனக்கு வயது 50. இன்னும் திருமண மாகவில்லை. தாயாரும் இல்லை. வயதான தகப்பனாரை கூலிவேலை செய்து பராமரிக்கிறேன். எனது கஷ்டங்கள் தீர என்ன வழி?
லக்னாதிபதி சனி நீசம். ராசிநாதன் குரு ராகு- கேது சம்பந்தம். பிறக்கும்போதே பிரம்மன் உங்கள் தலையில் 16 வயதுமுதல் போராட்டம் என்று எழுதிவிட்டான். எல்லா வகையிலும் தொல்லைகள்- ஒழுக்கக் குறைவு, கேவலம், கௌரவ பங்கம் என்று எழுதிவிட்டான். 50 வயதுக்குமேல் இனி திருமணம் அவசியமா? கணவனை இழந்தவர் அல்லது கணவனைப் பிரிந்தவரை மனைவி ஸ்தானத்தில் சேர்த்துக்கொள்ளலாம். 7-க்குடையவர் சந்திரன்- களஸ்திரகாரகன் சுக்கிரன் இருவருக்கும் ராகு- கேது சம்பந்தம் ஏற்படுவதால் இந்த நிலை.
● எம். ராணி, ஆலத்தூர் போஸ்ட்.
எனது மகன் டி.என்.பி.எஸ்.சி. இரண்டு வருடமாகப் பயின்று வருகிறான். வேலை கிடைப்பதற்கான பரிகாரங்கள் எதுவும் செய்ய வேண்டுமா?
இரண்டு ஜாதகம் அனுப்பி ஒரே கேள்வியை- அதே கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். தீபன்ராஜ், நாகராஜன் ஜெராக்ஸ் தெளிவாக இல்லை. அதுமட்டுமல்ல; இருப்பு தசையும் எழுதவில்லை. அது ஒருபுறம் இருந் தாலும் நாகராஜன் ரிஷப ராசி. 2020 வரை அட்டமச்சனி. தீபன்ராஜ்- தனுசு ராசி. ஜென்மச்சனி. 2020 வரை. இருவரின் படிப்பும் சுமார்தான்; பாஸ் செய்வதும் சிக்கல்தான். முயற்சியைக் கைவிட வேண்டாம். அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
● பெயர் வெளியிடாத அன்பர்.
நான் பத்தாம் வகுப்புதான் படித்தேன். எனக்கு ஒரு கால் ஊனம். எட்டு வருடத்துக்கு முன்பு வேறு ஒரு இனப் பெண்ணைக் காதல் திருமணம் செய்தேன். இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. மனைவி படித்தவள்- நான் படிக்காதவன். எனக்கு வேலை இல்லை. மனைவி வேலைக்குப் போகிறாள். எனக்குத் தெரிந்த ஐந்து கல்லூரிகளில் வேலைக்கு சேர்த்துவிட்டேன். வேலை செய்யும் ஆண்களிடம் தவறாகப் பழகி சம்பாதிக்கவும், முன்னேறவும் திட்டம் போடுகிறாள். டாக்டரேட் பட்டம் வாங்க படிக்கிறாள். பட்டம் பெறமுடியுமா? அரசு வேலை அமையுமா? என்னை ஆதரிப்பாளா? அல்லது விரட்டிவிடுவாளா? எனக்கு அவளைப் பிரிய மனமில்லை! என்ன தீர்வு?
உங்கள் மனைவி ஜாதகம் ஒழுக்கக் குறைவான ஜாதகம்தான். உங்கள் ஜாதகத்திலும் செவ்வாய், சந்திரன், சூரியன் மூன்று கிரகங்களும் நீசம்! மனைவி ஜாதகத்தில் சுக்கிரன் நீசம். தன் மானத்தைப் பெரிதாக நினைத்தால் மனைவி- மக்களை விட்டு வெளியேறி தனியாக எங்கேயாவது போய் பிழைப்பைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். எதுவும் உங்கள் முடிவுதான்! காசிராஜனே- மனைவி தவறு செய்ததைப் பொறுக்காமல் துறவு பூண்டு சாமியாராகியதாக வரலாறு உண்டு. இதை ஔவையாரே, "பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை அமையாவிட்டால் கூறாமல் சன்யாசம் கொள்' என்று சொல்லியிருக்கிறார்.